Last Updated : 18 Nov, 2019 04:40 PM

 

Published : 18 Nov 2019 04:40 PM
Last Updated : 18 Nov 2019 04:40 PM

மாநிலங்களவை காவலர்கள் சீருடை திடீர் மாற்றம்: 'ராணுவப் பச்சை' நிறத்துக்கு மாறியது

மாநிலங்களவையில் உள்ள காவலர்கள்(மார்ஷல்) சீருடை திடீரென இன்று மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவைக்கு இன்று சென்ற எம்.பி.க்கள் அனைவருக்கும் சிறிய ஆச்சர்யம் காத்திருந்தது. ஏனென்றால், மாநிலங்களவை தலைவருக்கு அருகே நிற்கும் மார்ஷல்கள் வழக்கமாக இந்தியப் பாரம்பரிய குர்தா உடையிலும், தலையில் தலைப்பாகையும் கட்டி இருப்பார்கள். இதுதான் நீண்டகாலமாக அவர்களின் சீருடையாக இருந்து வந்தது.

ஆனால், இன்று காலை அவர்களின் சீருடை மாற்றப்பட்டு, ராணுவப் பச்சை(ஆலிவ் கிரீன்) ராணுவ உடை போன்ற தோற்றத்தில் சீருடையும், தலையில் தொப்பியும் வழங்கப்பட்டு சீருடை முற்றிலும் மாற்றப்பட்டு இருந்தது.

மாநிலங்களவை இந்த ஆண்டுடன் 250-வது கூட்டத் தொடரை நிறைவு செய்கிறது.இதையொட்டி மார்ஷல்கள் சீருடை மாற்றப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1952-ம் ஆண்டு 245 உறுப்பினர்களுடன் தொடங்கிய மாநிலங்களவை வரும் 26-ம் தேதியுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கூட்டுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

1952ம் ஆண்டு முதல் இதுவரை 249 மாநிலங்களவை அமர்வு நடைபெற்றுள்ளது. 249 அமர்வுகளில் 3,817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேசமயம் பல்வேறு கால கட்டங்களில் மாநிலங்களவை கலைக்கப்பட்டதால் 60 மசோதாக்கள் காலாவதியாக விட்டன. முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டு முதல் 3,818 நாடாளுமன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களவையின் 250வது அமர்வை கொண்டாடும் வகையில் இன்று அவையின் இரண்டாவது பாதியில் இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு, சீர்திருத்தம் தேவை தலைப்புகளில் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் மாநிலங்களவையின் பரிமாண வளர்ச்சி குறித்த நினைவு தொகுதியாக, ரூ.250 நாணயம் மற்றும் ரூ.5 அஞ்சல் தலையும் வெளியிடப்படப்பட உள்ளது

முன்னதாக, மாநிலங்களவையின் 250வது அமர்வு தொடங்குவதையொட்டி அதை கொண்டாடும் விதமாக நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு, இதுவரை மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த 118 பக்கங்கள் மற்றும் 29 பிரிவுகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x