குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: ஜேஎன்யூ மாணவர்கள் தடுத்து நிறுத்தம்

நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட்ட ஜேஎன்யூ மாணவர் பேரணி | படம்: ஏஎன்ஐ
நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட்ட ஜேஎன்யூ மாணவர் பேரணி | படம்: ஏஎன்ஐ
Updated on
2 min read

குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஜேஎன்யூ மாணவர் போராட்டத்தை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

புதுடெல்லியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், விடுதிக் கட்டணம் உயர்வு, ஆடைக் குறியீடு மற்றும் ஊரடங்கு உத்தரவு நேரங்களுக்கான ஏற்பாடுகளைக் கொண்ட வரைவு விடுதி கையேட்டிற்கு எதிராக கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்க மூன்று பேர் கொண்ட குழுவை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது.

இதில் திருப்தியடையாத ஜேஎன்யூ மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் சரியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல்லைக்கழக வளாகத்திலிருந்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கத்தில் மாணவர்கள் பேரணி புறப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இது. இன்று தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடையும் நாடாளுமன்ற குளிர்கால அமர்வின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் தொடங்கப்பட்டது.

அணிவகுப்புப் பேரணியின்போது "பொதுக் கல்வியைக் காப்பாற்றுங்கள்", கட்டணம் குறைய வேண்டும்'' ''அனைவருக்கும் மலிவு விலையில் விடுதிகளை உறுதிப்படுத்துங்கள்'' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். முழக்கங்களையும் எழுப்பினர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜேஎன்யூ மாணவர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதால் ஜே.என்.யூவுக்கு வெளியே பத்து கம்பெனி போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு கம்பெனி 70 முதல் 80 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

ஜேஎன்யூ மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், வழியிலேயே போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஆரம்பத்தில், ஜே.என்.யூவின் வாயில்களுக்கு வெளியே இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு மாணவர்கள் அணிவகுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களின் பேரணி தொடங்கிய இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் செல்லும்போதே காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுக்கு லாலி பாப் தேவையில்லை: மாணவர்கள் கருத்து

ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.சாய் பாலாஜி கூறுகையில், ''டெல்லி காவல்துறை ஜே.என்.யூ மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அமைதியான அணிவகுத்துச் செல்வதை தடுத்து நிறுத்துகிறது! கமிட்டி அமைப்பதன் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாணவர்களை முட்டாளாக்குகிறது. பேச்சுவார்த்தை நடக்கும் வரை குழு ஏன் கட்டண உயர்வை நிறுத்தவில்லை? கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு நாங்கள் கோருகிறோம்'' என்றார்.

ஜே.என்.யூ மாணவர் அக்ஷத் கூறுகையில், ''மாணவர் சங்கம் ஒரு குழு அமைப்பது குறித்து அமைச்சகத்தினால் தெரிவிக்கப்படவில்லை. நிர்வாக அதிகாரிகளும் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத்துடன் பேச வேண்டும்'' என்றார்.

மற்றொரு மாணவி பிரியங்கா கூறுகையில், ''எங்கள் கோரிக்கைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்படாமல் குழந்தைகளுக்கு வழங்குவதுபோல லாலி பாப் வழங்கப்படுகிறது. குடும்பத்திலிருந்து பல்கலைக்கழகக் கல்விக்காக வந்துள்ள முதல் நபர் நான். என்னைப் போன்ற பலர் உள்ளனர். கல்வி என்பது ஒரு சலுகை பெற்ற சிலருக்கான பிறப்புரிமை அல்ல'' என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு மாணவர், “நாங்கள் நீண்ட காலமாக எங்கள் துணைவேந்தரைப் பார்த்ததில்லை. அவர் வெளியே வந்து எங்களுடன் பேச வேண்டிய நேரம் இது. ஆசிரியர்கள் மற்றும் வேறு வழியாக எங்களிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு பதிலாக, அவர் எங்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in