படேல் சமூகத்தினர் பந்த்: வன்முறைக்கு 6 பேர் பலி; ராணுவம் அழைப்பு

படேல் சமூகத்தினர் பந்த்: வன்முறைக்கு 6 பேர் பலி; ராணுவம் அழைப்பு
Updated on
1 min read

குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு 5 பேர் பலியானதோடு மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர்.

நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹர்திக் படேல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாநிலம் முழுவதும் இன்று (புதன்கிழமை) பந்த் நடைபெறுகிறது.

கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் விடுதலை பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் போலீஸ் வன்முறையைக் கண்டித்ததோடு, இதில் பத்திரிகையாளர்கள் பலரும் அடித்து உதைக்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசு சொத்துக்கள் சேதம்:

நேற்றிரவு (செவ்வாய் இரவு) போராட்டக்காரர்களால் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 5000 பேர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

6 பேர் பலி

அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு 5 பேர் பலியானது உட்பட மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு குஜராத்தில் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அகமதாபாத் நகரில் இணையச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் - உள்துறை அமைச்சர் ஆலோசனை

வன்முறை சம்பவங்கள் வெடித்ததையடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக முதல்வர் ஆனந்திபென் தெரிவித்தார்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுவது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

போலீஸார் மீது குற்றச்சாட்டு:

போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நேற்றிரவு விடுவிக்கப்பட்ட ஹர்திக் படேல், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையை கைவிட வேண்டும். அதேவேளையில் போலீஸார் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போலீஸார் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் சிலரும் காயமடைந்தனர். போலீஸாரை கண்டித்து நாளை (புதன்கிழமை) பந்த் நடைபெறும்" என அறிவித்தார்.

போலீஸார் மீது புகார் எழுந்ததையடுத்து அகமதாபாத் போலீஸ் கமிஷனர் சிவானந்த் ஜா கூறும்போது, “வன்முறையைக் கையில் எடுத்த போலீஸார் மீது விசாரணை நடைபெறும், நடவடிக்கைகள் உறுதி, ஏனெனில் இது வெட்கக் கேடான விஷயம்” என்றார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

இந்நிலையில், பந்த் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in