

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நிதி எதுவும் வசூலிக்கவில்லை,இனியும் வசூலிக்காது என ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்திய விஸ்வ இந்து பரிஷத் தெளிவுபடுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளை அமைக்கவும் மத்திய அரசை அறிவுறுத்தியது.
மத்திய அரசு அமைக்கும் அறக்கட்டளையில் விஸ்வ இந்து பரிஷத் தலைமையேற்க வேண்டும் என பல அமைப்புகளும் கூறிவருகின்றன. ராமர் கோவில் கட்ட நிதி எதுவும் திரட்டப்படவில்லை. திரட்டப்படும் நோக்கம் இல்லை என்று விஎச்பி தெரிவித்துள்ளது.
விஎச்பியின் சர்வதேச பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே ஒரு அறிக்கையில் இதுகுறித்து கூறியதாவது:
''1989ஆம் ஆண்டு முதல் ராமரின் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக விஎச்பி நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. மேலும் அதற்கான அறிக்கை எதையும் இதுவரை வெளியிட்டதில்லை.
இப்போதும்கூட, விஎச்பி அல்லது ராம ஜென்மபூமி நியாஸ் மஞ்ச் அமைப்பு கோயிலுக்கு நிதி வேண்டும் என யாரிடமும் போய் முறையீடுகள் செய்ததில்லை. கோயில் கட்ட நிதி வசூலிக்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை. ''
இவ்வாறு விஎச்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.