

நாடாளுமன்றத்தில் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமையேற்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படுவதை வெட்டவெளிச்சமாக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்து வழக்கில் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் சிதம்பரம் பங்கேற்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இதனிடையே சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. அவரது வேண்டுகோளின்படி அவரது குடும்பத்தினர் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்.
சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமையேற்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படுவதை வெட்டவெளிச்சமாக்க வேண்டும். பொருளாதாரத்தின் எந்த அம்சம் தற்போது நன்றாக உள்ளது. எதுவும் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.