

அக்னி 2 ஏவுகணை முதல்முறையாக இரவில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணையின் செயல் திறனைக் கண்டறிய அடிக்கடி சோதித்துப் பார்ப்பது வழக்கம். அதன்படி, ஒடிசா மாநிலம் பலாசூரில் கடலோரப் பகுதியில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி ஏவுகணை 2 கடந்த சனிக்கிழமை இரவு ஏவப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை நடந்த அக்னி ஏவுகணை சோதனைகள் பகலில் நடத்தப்பட்டவை. முதல்முறையாக சனிக்கிழமை இரவில் அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ எடைகொண்ட வெடிபொருளை சுமந்துகொண்டு 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.