

சிறார்களின் நலனுக்கு உகந்த உணவு வகைகளை குறிப்பிட்டு ஐ.நா. சிறுவர் நிதியம் (யுனிசெப்) சார்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் யுனிசெப் சார்பில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை ஊட்டச்சத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், 17 சதவீத குழந்தைகள் பலவீனமானவர்களாகவும், 33 சதவீத குழந்தைகள் எடைக் குறைவாகவும் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சிறுவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை பட்டியலிட்டு யுனிசெப் சார்பில் புத்தகம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 28 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தில், உருளைக்கிழங்கு வைக்கப்பட்ட பரோட்டா, காய்கறி உப்புமா, முளைக்கட்டிய பயறுகளைக் கொண்ட சப்பாத்தி, ஜவ்வரிசி கட்லட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறை குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துகள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களை தயாரிக்க ரூ.20-க்கும் குறைவாகவே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.