

ஜம்மு: காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை முதலாக, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில்போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும், எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், பாகிஸ்தான் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று முதல் ரயில் சேவை முழுமையாக தொடங்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், அங்கு அனைத்து ரயில்களும் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
- பிடிஐ