பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திய பட்னாவிஸுக்கு எதிராக முழக்கம்

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு நாள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பால் தாக்கரே நினைவகத்தில் நேற்று மலர்வளையம் வைத்து முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மூத்த தலைவர்கள் பங்கஜா முண்டே, வினோத் தவாடே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். படம்: பிடிஐ

Updated on
1 min read

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதல்வர் பதவி வேண்டும் என்ற சிவசேனா கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது. இதனால் கூட்டணி முறிந்தது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சிவாஜி பூங்காவில் உள்ள பால் தாக்கரே நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் அங்கிருந்து காரில் புறப்படத் தயாராகினர். அப்போது, அங்கு கூடிய சிவசேனா கட்சித் தொண்டர்கள், பட்னாவிஸுக்கு எதிராக முழக்கமிட்டனர். குறிப்பாக, ‘சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு ஜே’ என்ற சிவசேனாவின் பாரம்பரிய முழக்கத்தை எழுப்பினர். ஆனால் இவற்றுக்கு எவ்வித பதிலும் தராமல் பட்னாவிஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in