Last Updated : 18 Nov, 2019 10:51 AM

 

Published : 18 Nov 2019 10:51 AM
Last Updated : 18 Nov 2019 10:51 AM

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றார்


உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவி ஏற்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எஸ்.ஏ.போப்டேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள சரத் அரவிந்த் போப்டே, 2021ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதிவரை அதாவது 17 மாதங்கள் பதவியில் இருப்பார்.

இதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து, போப்டே இன்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனக்குப்பின் தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்ஏ.போப்டே பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அரசால் நியமிக்கப்பட்டு அதற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.

மகாராஷ்டிராவில் நாக்பூரில் கடந்த 1956-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி எஸ்ஏ போப்டே பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தார். பிஏ. இளங்கலைப் படிப்பும், அதன்பின் எல்எல்பி படிப்பை நாக்பூர் பல்கலைக்கழகத்திலும் போப்டே முடித்தார். அதன்பின் கடந்த 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக போப்டே பதிவு செய்தார்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கறிஞராக போப்டே பயிற்சி பெற்று, அதன்பின் 1998-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராகப் பதவி உயர்வு பெற்றார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 2000ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி போப்டே நியமிக்கப்பட்டார். அதன்பின் மத்தியப்பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2012, அக்டோபர் 16-ம் தேதி நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றியபின் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக போப்டே பதவி உயர்வு பெற்றார்.

போப்டேவின் மகன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போப்டேவும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x