

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் (ஒரே நாடு, ஒரே தேர்தல்) திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை அவசியம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் உள்ள நிர்மா பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுனில் அரோரா பேசியதாவது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் எளிதாக செயல்படுத்தக் கூடியது அல்ல. இதற்கு அரசியல் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பிறகு தேவை யான சட்டத் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். இத் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு மட்டுமே தெரிவிக்க முடியும்.
நாட்டில் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து வந்தன. பிறகு மாநில சட்டப்பேரவைகள் கலைக் கப்பட்டது மற்றும் பிற காரணங் களால் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
உங்கள் கார் அல்லது மோட்டார் பைக்கில் பழுது ஏற்படுவது போன்று தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) பழுது ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் மோசடி செய்ய முடியாது.
இவிஎம் மற்றும் விவிபாட் (ஒப்புகைச்சீட்டு கருவிகள்) மீது சிலர் எழுப்பும் சந்தேகங்களால் அவற்றின் உருவாக்கத்தில் பங் காற்றிய முன்னணி விஞ்ஞானி கள் மிகுந்த வருத்தம் அடைந் துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் வெவ்வேறு கட்சிகளுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் மேல் தட்டு மக்களைவிட அடித்தட்டு மக்களே வாக்களிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு சுனில் அரோரா பேசினார்.
- பிடிஐ