Published : 18 Nov 2019 08:36 AM
Last Updated : 18 Nov 2019 08:36 AM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது.

இந்த கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 20 அமர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி 2-வது முறை யாக ஆட்சிக்கு வந்தபின் நடை பெறவுள்ள 2-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும். இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளா தார சுணக்க நிலை, வேலை யின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.

அதேபோல் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தக் கூட்டத் தொடரில் வருமானவரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டம், இ-சிகரெட் விற்பனை, தயாரித்தல், விற்பனைக்காக இருப்புவைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சட்டம் ஆகிய 2 அவசரச் சட்டங்களைச் சட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அப்போது முத்தலாக் தடைச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதேபோல், குளிர்காலக் கூட்டத்தொடரையும் மிகவும் ஆக்கப்பூர்வமாகக் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சிவசேனா எம்.பி.க்கள்

இதனிடையே பாஜகவுடன், சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதால் சிவசேனா கட்சி எம்.பி.க்களுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி வரிசையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

27 கட்சி பிரதிநிதிகள்

இந்நிலையில் நேற்று மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 27 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், மதிமுக சார்பி்ல வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், திமுக சார்பில் டிஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவல் சட்டத்தில் காவலில் இருக்கும் மக்களவை எம்.பி. பரூக் அப்துல்லாவை விடுவித்து, கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரதமர் உறுதி

அப்போது பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, ‘‘அனைத்து விஷயங்களையும் விதிகளுக்கு உட்பட்டு ஆலோசிக்க வும், விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி, கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்தார்’’ என்றார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x