Published : 17 Nov 2019 07:30 PM
Last Updated : 17 Nov 2019 07:30 PM
அயோத்தி ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்க வேண்டும். முஸ்லிம்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினர்கூட இந்த தீர்ப்பு தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று உணர்கிறார்கள் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக இன்று அறிவித்தது.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் நிருபர்களிடம் கூறுகையில், " அயோத்தி நிலவிவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும். அனைத்து சமூகத்தினரும் இதை வரவேற்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன், தேசத்தில் உள்ள 130 கோடி மக்களும், அது இந்துக்களாக இருக்கட்டும், முஸ்லிம்களாக இருக்கட்டும் தீர்ப்பை வரவேற்க வேண்டும் என்றனர். நான் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரிடம் பேசினேன், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலிமைப்படுத்தும் என்று தெரிவித்தார்கள்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தினருக்கும் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என பரிதிநிதியா என வியப்பாகஇருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சீராய்வு செய்ய முடிவு செய்யும் முன், முஸ்லிம் சட்ட வாரியம் தங்கள் சமூகத்தில் உள்ள உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டதா" எனத் தெரிவித்துள்ளார்