

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் (ஏஐஎம்பிஎல்பி) முடிவு செய்துள்ள நிலையில், வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி சீராய்வு மனுத் தாக்கலால் பயனில்லை எனத் தெரிவித்துள்ளார்
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக இன்று அறிவித்தது. ஆனால், அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி, முஸ்லிம் சட்ட வாரியத்தின் முடிவில்இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதுகுறித்து இக்பால் அன்சாரி அயோத்தியில் நிருபர்களிடம் கூறுகையில், " அயோத்தி நிலவிவகார வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்றே நான் மேல்முறையீட்டுக்குச் செல்லப் போவதில்லை என்று முடிவு எடுத்து அறிவித்துவிட்டேன்.
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்தாலும் எந்தவிதமான பயனும் இல்லை. மீண்டும் முடிவு ஒரேமாதிரியாகத்தான் வரும். சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் முடிவு சமூகத்தின் ஒற்றுமையான சூழலுக்கு விரோதமாகவே இருக்கும்.
என்னுடைய கருத்துக்கள், சட்ட வாரியத்தின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை பாபர் மசூதி விவகாரத்தை இந்த புள்ளியோடு முடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன் " எனத் தெரிவித்தார்