Published : 17 Nov 2019 03:41 PM
Last Updated : 17 Nov 2019 03:41 PM

''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல!''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ காவல்துறை

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது கல்யாண சீசன் என்பதால் திருமண விடுப்பு வழங்கக் கோரி வந்துள்ள விண்ணப்பங்கள் காவல்துறையில் மலையென குவிந்து வருகிறதாம்.

உத்தரப் பிரதேசத்தில் கார்த்திகை மாதத்தில் முகூர்த்த நாட்கள் ஏராளமாக வருவதால் அங்கு கல்யாண சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை பணியாளர்களும் தங்கள் திருமணங்கள், தங்கள் குடும்பத்தினரின் திருமணங்கள், தாங்கள் செல்ல விரும்பும் திருமணங்கள் என மிகப்பெரிய பட்டிலையே வைத்திருக்கிறார்கள்.

இதனால் மாநிலமெங்கும் விடுப்பு கோரி வந்த விண்ணப்பங்களிலும் மலையெனக் குவிந்து வருகிறதாம். அனைத்துக் காவல்நிலையங்களிலும் ஒவ்வொன்றிலும் நிச்சயம் இரண்டு மூன்று விடுப்பு விண்ணப்பங்களாவது உயரதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறதாம்.

மூத்தக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்துள்ள திருமண விண்ணப்பங்கள் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ''மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் திருமண விடுப்புக்கு இரண்டு முதல் மூன்று விண்ணப்பங்கள் உள்ளன. இதில் 24 போலீஸ் ஜோடிகளும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். லக்னோவின் மூத்த காவல் காணிப்பாளர் கலாநிதி நைதானி திருமணங்களுக்கு தாராளமாக விடுப்பு வழங்கியுள்ளார்'' என்றார்.

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறுகையில், ''மணமகன் மற்றும் மணமகள் இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களது திருமணங்களில் மூத்த போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்வார்கள். இது தவிர இது மும்முரமான கல்யாண சீசன் என்பதால் பலருக்கும் தங்கள் உறவினர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவலைகள் ஒருபக்கம் அதிகமாக இருந்தாலும், போலீஸார்வாழ்க்கையிலும் நல்லது கெட்டது உண்டுதானே. திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒரு சிறப்பு சந்தர்ப்பம். இவர்களுக்கு 30 நாட்கள் வரை விடுப்பு வழங்க திருமணம் ஒரு தகுதியான காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் அதிகம் பேர் விடுப்பில் செல்வதால் கூடுதல் காவல் பணியாளர்களை லக்னோவில் பணியமர்த்தும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.''

இவ்வாறு நைதானி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x