

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி காங்கிரஸ், இடது சாரிகள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் நடைபெறும் பந்த் காரணமாக பிரகாசம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து முனையங்களுக்கு முன்னர் திரண்ட பல்வேறு கட்சியினரும், "ஆந்திர மாநிலத்துக்கு தாமதிக்காமல் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்" எனக் கோஷமிட்டனர்.
சில இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து உருவ பொம்மை எரிப்பு, டயர் எரிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதுல்ல பிரம்மானந்த ரெட்டி கூறும்போது, "பிரகாசம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பந்த் ஒரு துவக்கமே. மத்திய அரசு அதி விரைவில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் போராட்டம் மேலும் வலுப்பெறும்.
அதுமட்டுமல்லாது, பிரகாசம் மாவட்டம், ராயலசீமா மாவட்டம், வட பகுதியில் உள்ள கடலோர ஆந்திர மாவட்டங்களுக்கும் மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார்.