Published : 17 Nov 2019 12:12 PM
Last Updated : 17 Nov 2019 12:12 PM

அயோத்தி சாதுக்களை தரக்குறைவாகப் பேசிய பரமஹன்ஸ் பதவியில் இருந்து இடைநீக்கம்: மத்தியப்படை பாதுகாப்பு தர வலியுறுத்தல்

புதுடெல்லி

ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் முக்கியத்துவம் பெறுவதில் அயோத்தி சாதுக்கள் இடையே மோதல் நிலவுகிறது. இதில், ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் நிருத்திய கோபால் தாஸை தரக்குறைவாகப் பேசிய தபஸ்வீ சாவ்னி கோயில் மடத்தின் தலைவர் பரமஹன்ஸ் தாஸ், அப்பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பரமஹன்ஸின் தபஸ்வீ சாவ்னியின் தலைமை குருவான சர்வேஷ் தாஸ் வெளி யிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘சாதுக்களாக இருப்பவர்கள் சக சாதுக்கள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பரமஹன்ஸ் தாஸ், தபஸ்வீ சாவ்னி கோயில் மடத்தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ என்றார்.

அயோத்தி வழக்கில் கடந்த 9-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறக்கட்டளையில் முக்கியத் துவம் பெறுவதில் அயோத்தி சாதுக்கள் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி நியாஸின் நிர்வாகக்குழு உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தியுடன், பரம ஹன்ஸ் தாஸ் பேசிய உரையாடல் வாட்ஸ்-அப்பில் வெளியாகி வைரலானது.

இதில் தன் தலைவரை தரக் குறைவாகப் பேசியதாக நிருத்திய கோபால் தாஸின் ஆதரவாளர்கள் பரமஹன்ஸின் தபஸ்வீ சாவ்னியை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். இதில், சிலர் அவரை தாக்கவும் முற்பட, போலீஸார் உதவியுடன் தம் சாவ்னியில் இருந்து தப்பினார் பரமஹன்ஸ். இதுதொடர்பான செய்தி நேற்று முன்தினம் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், நிருத்திய கோபால் தாஸ் ஆதரவாளர்கள் தம்மை கொன்று விடுவார்கள் எனவும், போதிய மத்திய படைகளின் பாதுகாப்பு அளித்தால் மட்டுமே அயோத்தி திரும்ப முடியும் என்று பரமஹன்ஸ் அறிக்கை அளித்துள்ளார். இதை வீடியோவில் பேசி பதிவு செய்து அதை உத்தரபிரதேச பத்திரிகைகளுக்கு வாரணாசியில் இருந்து பரமஹன்ஸ் அனுப்பியுள்ளார். அயோத்தி சாதுக்களில் முக்கியமானவராகக் கருதப்படும் பரமஹன்ஸுக்கு ஏற்கெனவே துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் பாதுகாப்பு உ.பி. மாநில அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த பாதுகாப்பை மீறியே இரு நாட்களுக்கு முன் பரமஹன்ஸ் தன் சாவ்னி முன்பாக நிருத்திய கோபால் தாஸ் ஆதரவாளர்களின் தாக்குதலில் சிக்கினார். இதிலிருந்து அவரை காத்த உ.பி. போலீஸார் பரமஹன்ஸை வாரணாசிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x