

மகாராஷ்டிரா மாநிலம் முழுமைக்கும் சொந்தமானவர் சத்ரபதி சிவாஜி. எந்தக் கட்சிக்கும், சாதிக்கும் சொந்தமானவர் அல்ல. அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட கட்சி என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பாஜகவை மறைமுகமாக சிவசேனா விமர்சித்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை இல்லாததால் சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆளுநர் ஆட்சி அமைக்கவாய்ப்பை நிராகரித்தன. இதனால், ஆளுநர் பரிந்துரையின் பெயரில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் சிவசேனா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. இதற்காக 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் சத்ரபதி சிவாஜியை சொந்தம் கொண்டாடிவரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து அவர் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சத்ரபதி சிவாஜி மாகாராஜா எந்த ஜாதியையும், கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் 11 கோடி மக்களுக்கும் பொதுவானவர் சிவாஜி மகாராஜா. ஆனால் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் சிவாஜி மகாராஜாவால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருகட்சி தாங்கள்தான் என்ற ரீதியில் பேசியது. பாஜக சேர்ந்து போட்டியிட்ட சிவாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த உதயன்ராஜே மக்களவைத் தேர்தலில் சத்தாரா தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரின் தோல்வி என்பது தனிமனிதருக்கான தோல்விதானேத் தவிர ஒரு பரம்பரைக்கானது அல்ல.
மகாராஷ்டிரா அகந்தை, போலித்தனம் ஆகியவற்றை ஒருபோதும் தாங்கிக்கொள்ளக் கூடாது என சிவாஜி மகாராஜா நமக்குக் கற்பித்துள்ளார். சிவாஜியின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்பவர்கள், அவர் மீது செய்த சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை. தங்களை இந்த மாநிலத்தின் ஆள்பவர்களாக மனதில் நினைத்துக் கொள்கிறார்கள். இது சரிவுக்கான அறிகுறிதான்.
குஜராத் மாநிலத்தில்கூட சர்தார் படேலுக்கு சிலை வைக்கும் திட்டத்தைத் தொடங்கி அங்குச் சிலை அமைத்து முறைப்படி திறந்துவிட்டார்கள். ஆனால், மும்பையில் அரபிக்கடலில், சிவாஜி நினைவாக அவருக்குச் சிலை வைக்க பாஜக அரசு திட்டமிட்டு, திட்டத்தைத் தொடங்கியும் இன்னும் முடிக்கவில்லை.
குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மோடியால் சர்தார் படேல் சிலைக்கான திட்டம் நர்மதா மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அவர் பிரதமராக வந்து 5 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்