Published : 17 Nov 2019 10:51 AM
Last Updated : 17 Nov 2019 10:51 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்சித் தாவலை தடுக்குமா?

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 எம்எல்ஏ-க் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அளித்த தீர்ப்பு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உட்பட 17 பேரை கட்சித் தாவல் தடைச் சட்டப்படி சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது வரவேற்கத் தக்கது.

அதேசமயம், அந்த தீர்ப்பின் ஒருபகுதியாக ‘சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முழுக்க தடை’ என்ற அம்சத்தை ஏற்க மறுத்து அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. இதன்மூலம், தகுதி நீக்கம் செய் யப்பட்ட எம்எல்ஏ-க்கள் 17 பேரில் 16 பேர் உடனடியாக பாஜக-வில் இணைந்து, அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதன்மூலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சி யில் சேர்ந்து, அடுத்து நடைபெற வுள்ள தேர்தலில் போட்டியிட முடி யும் என்றும், அதில் வெற்றிபெற் றால் மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்து விட முடியும் என்ற நிலையும் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இன் னொரு ஓட்டை விழுந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருது கின்றனர்.

இந்திய அரசியலைப் பொறுத்த மட்டில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் பணத்துக்காகவும், பதவிக்காகவும் கட்சி தாவும் நிலை சர்வ சாதா ரணமாக நடந்து வந்தது. இதில் நாடு முழுவதும் அதிர்வை ஏற் படுத்திய சம்பவம் கடந்த 1967-ல் ஹரியாணா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காயா லால் என்ற எம்எல்ஏ ஒரே நாளில் மூன்று கட்சிக்கு தாவியது தான். இந்த சம்பவத்துக்குப் பின், ‘ஆயா ராம்; காயா ராம்’ என்ற வாசகம் புழக்கத் துக்கு வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற விவாதம் நேர்மையான அரசியல் தலைவர்கள் மத்தியில் எழுந்தது.

அதற்கான முயற்சியாக 1985-ல் பத்தாவது அட்டவணை உருவாக் கப்பட்டது. நாடாளுமன்றம் அல் லது சட்டப்பேரவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர் சுய விருப் பத்துடன் தனது கட்சியின் உறுப் பினர் அந்தஸ்தை விட்டுக் கொடுத் தாலோ அல்லது வாக்கெடுப்பின் போது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டாலோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஓரளவுக்கு கட்சி தாவுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்னர், கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விலகி, வேறு கட்சியில் இணைந்தால், அவர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஓட்டையைப் பயன்படுத்தி, மொத்தமாக கட்சி தாவும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. தெலங்கானாவில் 16 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 12 பேர் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு தாவியது, கோவாவில் 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 10 பேர் பாஜக-வுக்கு தாவியது இதற்கான உதாரணங்களாக அமைந்தன. இப்போது கர்நாடகா எம்எல்ஏ-க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் மற்றுமொரு ஓட்டை விழச் செய்துள்ளது.

இச்சட்டத்தின்படி, உறுப்பினர் களை தகுதி நீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருந் தாலும், எவ்வளவு காலம் தகுதி நீக்கம் நீடிக்கும் என்பது குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. எனவே, இந்த சட்டப் பேரவை காலம் முழுக்க தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப் பித்த உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஓட்டை வழியாக நுழைந்து தற்போது தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்எல்ஏ-க்கள் மீண்டும் சட்டப் பேரவைக்குள் நுழைய முயற்சிப் பது அரசியலில் புதிய முன்னுதா ரணமாக அமையும் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x