

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானம் இன்று மாலை 5 மணிக்கு தீபாராதனையுடன் திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை 5 மணிக்கு தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து முறைப்படி மூலவர் இருக்கும் கதவை திறந்தார். அப்போது தமிழகம், கேரளம் உள்ளிட்டவற்றில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேல்சாந்தியாக ஏ.கே.சுதிர் நம்பூதரி நாளை பொறுப்பு ஏற்கிறார் அதேபோல, மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதரி பொறுப்பு ஏற்கிறார். அதன்பின் சபரிமலையில் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
கார்த்திகை முதல் நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதிர் நம்பூதிரி ஐயப்பன் கோயிலில் முறைப்படி பூஜைகள் செய்து மண்டல பூஜையைத் தொடங்கி வைப்பார்.
காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27-ம் தேதி நடைபெறும்.
மண்டல பூஜைக்காக இருமுடி கட்டி சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல், பம்பைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நண்பகல் 2 மணிமுதல் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மனுவை மாற்றியது. அதேசமயம், பெண்கள் செல்லத் தடை ஏதும் விதிக்கவில்லை.
இதனால், இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்கள் 36க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார்கள். ஆனால், சபரிமலை அமைதியைக் குலைக்கும் வகையில் விளம்பரத்துக்காக வரும் பெண் ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு ஏதும் அரசு அளிக்காது என்று தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் கோயில் அமைந்திருக்கும் மாவட்டமான பத்தினம்திட்டாவில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களிலும் போலீஸார் ஷிப்டு முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலைக்குச் செல்ல பம்பையில் பக்தர்கள் வந்தபோது போலீஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கூட்டத்தில் வந்த பெண்களை மறித்து அவர்களின் அடையாள அட்டையை வாங்கி ஆய்வு செய்தனர். அதில்10 பெண்கள் 50வயதுக்கும் கீழ்பட்டவர்கள் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அந்த பெண்கள் அனைவரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்களை பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்து உடன் வந்த மற்ற பக்தர்களை மலைஏறுவதற்கு போலீஸார் அனுமதியளித்தனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவ வசதிகள், தரிசனத்துக்கான முன்பதிவு போன்றவற்றை விரிவாக தேவஸம்போர்டு செய்துள்ளது.