பாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் திட்டவட்டம்

பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் : கோப்புப்படம்
பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் : கோப்புப்படம்
Updated on
2 min read

வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன், அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் வழங்காவிட்டாலும் சபரிமலை செல்வோம் என்று பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் உறுதியாகத்தெரிவி்த்துள்ளார்

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தனர். ஆனால், 2 நீதிபதிகளான ரோஹின்டன் நாரிமன்,டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இருப்பினும் 5 நீதிபதிகள் அமர்வில் 3 பேர், 7 பேர் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைத்ததால், அந்தத் தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின் பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு வரும் 16-ம்தேதி செல்லப் போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்குப் பேட்டியில், " சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல, அவர்கள் விளம்பரம் தேடுவதற்கான இடமும் அல்ல. அவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம் என்று கேரள அரசு கூறியது குறித்து பெண்கள்நல ஆர்வலர் திருப்தி தேசாய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், " நவம்பர் 20-ம் தேதிக்குப்பின் சபரிமலை கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். நான் அங்கு செல்லும் முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பம் அளிப்போம். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம். ஒருவேளை கேரள அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டாலும்கூட நான் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பூஜையுடன் நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் நாளை பிறப்பதையொட்டி மண்டலபூஜை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in