

கோவா அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த கடற்படைக்குச் சொந்தமான மிக் ரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த விமானிகள் இருவரும் பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
இதுகுறித்து கோவா கடற்படை அதிகாரி அட்மிரல் பிலிப்போஸ் ஜார்ஜ் பினுமூட்டில் கூறியதாவது:
கோவாவில் உள்ள டபோலின் நகரில் உள்ள ஹன்சா கடற்படை தளத்தில் இருந்து இன்று நண்பகலில் மிக் ரக பயிற்சி விமானத்தில் பயிற்சிக்காக இரு விமானிகள் சென்றார்கள். அப்போது தலைநகர் பனாஜியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள வெர்னா என்ற கிராமத்தில் திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இஞ்சினில் இருந்து தீப்பிழம்பு ஏற்பட்டு கீழே விழுந்தது.
ஆனால், விமானத்தில் இருந்து இரு விமானிகள் ஷியோ காந்த், தீபக் யாதவ் இருவரும் பாரூசூட் மூலம் பத்திரமாக உயிர் தப்பினார்கள். வழக்கமான பயிற்சிக்காக வீரர்கள் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த விமானிகள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போலீஸாரும், கடற்படையினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்
இதுகுறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில் " இரு விமானிகள் செல்லக்கூடிய எம்ஐஜி-29கே ரக விமானம் வழக்கமான பயிற்சியில் கோவாவின் டபோலின் ஹன்சா தளத்தில் இருந்து இன்று நண்பகல் சென்றது. அப்போது திடீரென இரு எஞ்சின்களில் ஒரு இஞ்சினில் இருந்து தீப்பிழம்பு ஏற்பட்டது. விமானத்தை தரையிறக்க விமானி முயன்றபோது, அது முடியாமல் போகவே விமானி இருவரும் சாதுர்யமாக பாரசூட் மூலம் தப்பினார்கள். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது