Last Updated : 16 Nov, 2019 11:09 AM

 

Published : 16 Nov 2019 11:09 AM
Last Updated : 16 Nov 2019 11:09 AM

மக்களை ஏழ்மையில் தள்ளும் மத்திய அரசு; செலவு செய்யும் திறன் குறைகிறது: பிரியங்கா, ராகுல் கண்டனம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நுகர்வோர் செலவு செய்யும் திறன் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்களின் செலவு செய்யும் திறன் குறைகிறது. மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் சாடியுள்ளனர்.

நுகர்வோர் செலவு ஆய்வு அறிக்கை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.

2017-18 ஆம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவு ஆய்வு அறிக்கை முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஊடகங்களில் வெளியான தகவலில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களின் செலவு செய்யும் திறன் முதல் முறையாகக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் தேவை அளவு குறைந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த ஆய்வு அறிக்கையில் திரட்டப்பட்ட பல்வேறு தகவல்கள் முழுமையாக இல்லை எனக் கூறி அந்த ஆய்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், " 2017-18 ஆம் ஆண்டு நுகர்வோர் செலவு ஆய்வு அறிக்கையில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களில் பல்வேறு குறைகள் இருப்பதால், அந்த ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக 2020-2021, மற்றும் 2021-2022 ஆம் ஆண்டில் தனியாக நுகர்வோர் செலவு தொடர்பாக சர்வே செய்யப்பட்டு வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நுகர்வோர் செலவு ஆய்வு அறிக்கை குறித்து வெளியான தகவலில், நுகர்வோர்கள் உணவுக்காக செலவு செய்யும் தொகை குறைந்துள்ளது. குறிப்பாக பருப்பு, மசாலா பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்குச் செலவு செய்யும் அளவு குறைந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

ஆனால், இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வரைவு விவரங்கள்தான். இறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்ல என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறுகையில், "இந்தியாவில் நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவு சீர்குலைந்துவிட்டது. மக்களின் ஏழ்மையைப் போக்கவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் சுதந்திரத்துக்குப் பின் ஏராளமான அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தன. ஆனால், தற்போது ஆளும் மத்திய அரசு மக்களை ஏழ்மைக்குள் தள்ளுகிறது.

ஆள்பவர்களின் கொள்கைகளின் விளைவுகளைக் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் எதிர்கொள்கிறார்கள். தங்களின் கார்ப்பரேட் நண்பர்கள் நாள்தோறும் பணக்காரர்கள் ஆவதை பாஜக உறுதி செய்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், " மோடி நாமிக்ஸ் (மோடியின் பொருளாதாரம்) மோசமாக இருக்கிறது. மத்திய அரசு தன்னுடைய நிறுவனம் திரட்டிய தகவல்களை, தயாரித்த அறிக்கையைக் கூட வெளியிடாமல் மறைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவர் கேரா ட்விட்டரில் கூறுகையில், "தேசிய சாம்பிள் சர்வேயின் 2017-18 ஆம் ஆண்டு நுகர்வோர் செலவு அறிக்கை கசிந்துள்ளது. அதில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒருவர் செலவு செய்யும் அளவு 3.7 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஒருவர் மாதத்துக்கு ரூ.1,501 செலவு செய்த நிலையில், 2017-18 ஆம் ஆண்டு ரூ.1,446 மட்டுமே செலவு செய்கிறார். நுகர்வோர் உணவுக்குச் செலவிடும் தொகையே குறைந்துவிட்டது. கிராமப்புறங்களில் மக்களின் நிலை மோசமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x