

ராஜஸ்தானில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் இறந்ததற்கு நச்சு உணவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ளது சாம்பார் ஏரி. இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக இது விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவை இனப் பெருக்கத்துக்காக வந்து செல்லும். இந்நிலையில் அந்தப் பகுதியில் 4,800-க்கும் மேற்பட்ட பறவைகள் அண்மையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தன.
பறவை காய்ச்சலால் இவை இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் போபால் ஆய்வக அறிக்கை இதனை நிராகரித்தது. இந்நிலையில் பிகானீரில் உள்ள ராஜஸ்தான் கால்நடை பல்கலைக்கழக பூர்வாங்க உடற்கூறாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜக்ரூப் சிங் யாதவ் கூறும்போது, “இறந்து கிடந்த புழுக்களை தின்றதால் இப்பறவைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. நரம்பு மற்றும் தசைகளை கடுமையாக பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய்தான் (botulism) இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஒருவகை பாக்டீரியாவால் போட்டுலிசம் நோய் ஏற்படுகிறது” என்றார்.