

உச்ச நீதிமன்ற வழக்கில் ராமர் கோயில் கட்டும் பணியை தம்மிடம் ஒப்படைக்க நிர்மோஹி அஹாடா கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவ்வமைப்பினர் மேல்முறையீட்டை சீராய்வு மனுவாகத் தாக்கல் செய்ய ஆலோசனை செய்ய உள்ளனர்.
அயோத்தி நிலப்பிரச்சனையின் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில், ராமர் கோயில் கட்டும் பணியை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி நிர்மோஹி அஹாடா அளித்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இதற்காக, ராமர் கோயில் கட்டும் பணிக்காக அமையவிருக்கும் அறக்கட்டளையில் உறுப்பினராக நிர்மோஹி அஹாடா, மத்திய அரசை அணுகலாம் என்றும் தனது உத்தரவில் கூறி இருந்தது.
இதில், திருப்தி அடையாத நிர்மோஹி அஹாடாவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கு முன்பாக நீதிமன்றத் தீர்ப்பின் மீது ஆலோசனை செய்கின்றனர்
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் நிர்மோஹி அஹாடாவின் தலைவர் ராஜா ராம்சந்த் ஆச்சார்யா கூறும்போது, ‘அயோத்தி வழக்கில் நமது அஹாடா, மிகவும் பழமையான மனுதாரராக இருந்தும் ராமர் கோயில் கட்டும் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த நாம் மேல்முறையீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசிப்போம்.’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகிப்பதில் அயோத்தி மடங்களின் சாதுக்கள் இடையே மோதல் வலுக்கிறது. அதேசமயம், ராமர் கோயில் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த விஷ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகிகள் இடையிலும் இருவேறு மாறுபட்டக் கருத்துகள் எழத் துவங்கி உள்ளன.
இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டி ஒரு அறக்கட்டளை அமைக்கும் பணியை மத்திய அரசு துவக்கி விட்டது. இதில், மத்திய உள்துறை, சட்டத்துறை மற்றும் கலாச்சாரத்துறை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.