

ஆந்திரப் பிரதேச மாநிலம் பன்யாம் என்ற இடத்தில் உள்ள மாணவர்கள் தங்கிப் படிக்கும் பள்ளியில் புதன்கிழமை 6 வயது மாணவர் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் நிலைதடுமாறி விழுந்து தீக்காயங்களுடன் சிகிச்சைப் பலனின்றி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குநர் மற்றும் கரஸ்பாண்டெண்ட் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளி நிர்வாக இயக்குநர் விஜய்குமார் ரெட்டி, கரஸ்பாண்டெண்ட் நாகா மல்லேஸ்வர் ரெட்டி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரைவில் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
பலியான மாணவர் பெயர் புருஷோத்தம் ரெட்டி, திப்பாயிப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்தப் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.
பன்யம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “புதனன்று சாப்பாட்டு நேரத்தில் இது நடந்தது, பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி புருஷோத்தம் இறந்தான்” என்றார்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சம்பவத்தை விவரிக்கும் போது, “உணவு நேரத்துக்கான மணி அடித்தவுடன் குழந்தைகள் சாப்பாட்டு அறையை நோக்கி விரைந்தனர். அங்கு சூடான பாத்திரங்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. அப்போதுதான் புருஷோத்தமன் நிலைதடுமாறி சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்து விட்டான். அவன் விழும்போது பெரிய மாணவர்கள் யாரும் அருகில் இல்லை.
மற்ற குழந்தைகளின் அலறல் கேட்ட பிறகுதான் ஊழியர்கள் வந்து பையனை மீட்டனர். முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர், பிறகு கர்நூல் ஜிஜிஎச் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் உயிர் பிரிந்தது” என்றார்.
அலட்சியத்தினால் இந்த அப்பாவிச் சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டதாக ஆந்திராவின் இப்பகுதியில் மக்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.