

அயோத்தி வழக்கில் மசூதி கட்ட மத்திய அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்யப்படும் என உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்போர்டு தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என இந்த வழக்கில் உ.பி. சன்னி வக்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகியுமான சப்ரயப் ஜிலானி கூறியிருந்தார்.
அயோத்தி விவகாரத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது அவசியமா என்பது பற்றி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சீராய்வு மனு தேவையா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்போர்டு தலைவர் சுபர் பரூக்கி கூறியதாவது:
‘‘அயேத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் மசூதி கட்ட மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இப்போதே நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.
சட்ட ஆலோசனைக்குப் பிறகே நிலத்தை ஏற்பது பற்றி முடிவெடுப்போம். இந்த வழக்கில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும் அதன் முடிவையும் நாங்கள் பரிசீலிப்போம்’’ எனக் கூறினார்.