Published : 15 Nov 2019 02:12 PM
Last Updated : 15 Nov 2019 02:12 PM

டெல்லியில் மீண்டும் மோசமான காற்று மாசு: உலக  பட்டியலில் முதலிடம் 

டெல்லியில் காற்று மாசு இன்று இதுவரை இல்லாத அளவு அதிகரிதது உலகின் மிக மோசமான மாசடைந்த நகரம் என்ற நிலையை எட்டியுள்ளது.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது.

இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

காற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் இன்று வரை (நவம்பர் 15-ம் தேதி) அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையை தொட்டது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு நகரம் என்ற நிலையை இன்று எட்டியது.

காற்று மாசு அளவு இன்று 527 என்ற அளவை தொட்டது. உலக அளவில் காற்று மாசு அதிகம் கொண்ட பட்டியலில் இது முதலிடம் ஆகும். இந்த பட்டியலில் ஹாங் ஷு 167 புள்ளிகளும், வியட்நாமின் ஹனோய் 182 புள்ளிகளும், பாகிஸ்தானின் லாகூர் 193 என்ற அளவில் காற்று மாசு உள்ளது. ஆனால் டெல்லியில் 527 என்ற அளவில் இன்று காற்று மாசு அளவு நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x