

விஜயவாடா
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழக்க நேரிடும்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்.எல்.ஏக்களின் பலம் உள்ளது. இதற்கு அடுத்தப் படியாக தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 எம்எல்ஏக்களுடன் எதிர்க் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும், மத்தியில் மோடி அரசையும் எதிர்த்து சந்திர பாபு நாயுடு தற்போது அரசியல் செய்து வருகிறார். இதனிடையே சோர்வடைந்துள்ள கட்சி தொண்டர் களை ஊக்கப்படுத்த, தினமும் காணொலி மூலமாக அவர் ஆலோ சனைகளை வழங்கி வருகிறார்.
ஆனால், அதற்குள்ளாகவே சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி தர ஆளும் கட்சியும், பாஜகவும் தனித்தனியாக அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தி வருகின்றன.
தெலங்கானாவில் கடந்த முறை நடைபெற்ற மேலவை உறுப்பினர் களின் தேர்தலின்போது, தனது கட்சி வேட்பாளர் வெற்றிபெற தெலுங்கு தேசம் கட்சி சார்பில் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கில் நாயுடுவின் பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரி விக்கின்றனர்.
அதேபோல, ஆந்திராவில் தேர்தல் நடந்து முடிந்து 7 மாதங் கள் ஆன நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிஎம் ரமேஷ் மற்றும் சுஜனா சவுத்ரி ஆகியோர் அக்கட்சியை விட்டு விலகி, பாஜகவில் இணைந்தனர். இவர்களை போலவே, மேலும் சில முக்கிய கட்சி நிர்வாகிகளும் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை தொடர்ந்து, தற் போது உள்ள 23 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 14 எம்எல்ஏக்களா வது பாஜக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைய தயாராக உள்ளனர். இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் நாராயண சாமி சமீபத்தில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அப்படி நடந்தால், தெலுங்கு தேசம் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும். அதே சமயம், பாஜகவில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் இணை வதால், அக்கட்சி பலம் பெற்று, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விடும்.
இதனிடையே, நடிகர் பவன் கல்யாணும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னுடைய ஜனசேனா கட்சி இருக்க வேண்டும் என கருதுவதாக தெரிகிறது. இதனால், ஜெகன் மோகனை அவர் நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டார்.
இதனை அறிந்த ஜெகனும், பவன் கல்யாணின் சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படை யாக விமர்சித்து வருகிறார். இதுவும் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.