

புதுடெல்லி
ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்வதில் முக்கியத்துவம் யாருக்கு என்பதில் அயோத்தி சாதுக்கள் இடையே மோதல் உரு வாகி உள்ளது.
இதுகுறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவ ரான நிருத்திய கோபால்தாஸ்(81) கூறும்போது, ‘‘புதிதாக ஒரு அறக் கட்டளை நிறுவுவதால், பணத்துடன் அரசு அதிகாரிகளின் உழைப்பும் வீணாகும். இப்பணிக்காக 34 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப் பட்டு என் தலைமையில் உள்ள அறக்கட்டளையே போதுமானது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிக் காலத்திலேயே கோயிலைக் கட்டிவிட விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமி அறக் கட்டளையை நிர்வகித்து வரும் விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) சர்வதேச துணைத் தலைவரான சம்பக் ராய் கூறும்போது, ‘‘எங்களது அறக்கட்டளையின் முழுமையான மேற்பார்வையுடன் அயோத்தியில் ராமர் கோயில் அமையும். நாங்கள் செய்துவைத்த கட்டுமானப் பணி கள் மூலம் முதல்தளம் உடனடி யாகத் தயாராகி விடும்’’ எனத் தெரிவித்தார்.
பாஜகவின் தோழமை அமைப் பான விஎச்பி, ராமஜென்ம பூமி அறக்கட்டளையை கடந்த 1985-ம் ஆண்டு நிறுவியது. அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதிலும் இருந்து பல கோடி ரூபாய் வசூல் செய்தது. டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அயோத்தி யின் கர்சேவக்புரம் எனும் பகுதியில் ஒரு பணிமனை அமைத்து கோயிலுக்கான சிற்பத் தூண்களையும் வடித்து வந்தது. அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இப்பணி மனை சட்டவிரோதமானது என எவரும் வழக்கு தொடுக்காததால் தாமே உகந்த அமைப்பு எனக் கூறி, கோயில் பணியை தமது அறக்கட்டளையிடம் அளிக்கக் கோரும் விஎச்பி மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
இதில் விஎச்பி பெயரை நேரடி யாகக் குறிப்பிடாமல் தற்காலிக ராமர் கோயிலின் தலைமை பூசாரி யான ஆச்சார்யா சத்யேந்தர்தாஸ் கூறும்போது, ‘‘ஜம்முவின் மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் இருப்பது போன்ற அறக்கட்டளை இங்கு ராமருக்கும் அமைய வேண் டும். அறக்கட்டளை எனும் பெயரில் அயோத்தியில் ஒரு அமைப்பு பல வருடங்களாக ஊழல் செய்து வருகிறது. ராமரின் பெயரில் பல கோடிகள் வசூல் செய்துவிட்டு இப் போது தாம் கோயில் கட்ட விரும்பு வதும் சரியல்ல’’ என்றார்.
அயோத்தியின் ராமாலயா அறக்கட்டளையின் செயலாளரான அவ்முக்தேஷ்வரானந்த் கூறுகை யில், ‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் வழிகாட்டுதலின் பேரில் அமைந்த எங்கள் அறக் கட்டளையில் நான்கு சங்கராச்சாரி யார்களும் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, கோயில் கட்டும் பணியை எங்களிடம் ஒப் படைக்குமாறு கூற டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்’’ எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அயோத்தியின் ஜானகி காட் பாராஸ்தனின் மஹந் தான ஜென்மேஜயா சரண் கூறும் போது, ‘‘அரசால் அமைக்கப்பட இருக்கும் அறக்கட்டளையில் அயோத்தியின் ஒவ்வொரு அறக் கட்டளையில் இருந்தும் ஒருவரை யாவது உறுப்பினராக சேர்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதால் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் முத்திரைகள் கோயில் மீதும் பதித்தால்தான் அதற்காக போராடி யவர்கள் யார் என பக்தர்கள் அறிய முடியும்’’ என்று தெரிவித்தார்.
மற்றொரு முக்கிய சாதுக்கள் சபையான நிர்மோஹி அஹாடா வின் தலைவர் மஹந்த் திரேந்தர் தாஸ் கூறுகையில், ‘‘ராமர் கோயி லின் பெயரால் விஎச்பி வசூல் செய்த தொகையை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த அமைப்பின் தலையீடும் இன்றி மத்திய அரசே தனது அறக்கட்டளையை நிறுவ வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
அயோத்தியின் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், பிரச்சினைக்குள்ளான 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயி லுக்காக ஒதுக்கியதுடன் கோயில் கட்டுவதற்காக மூன்று மாதங்களில் அறக்கட்டளை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.