ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரியத் தலைவர் ரூ.51,000 நன்கொடை 

உத்தரப் பிரதேச மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவர் வாஸிம் ரிஸ்வி.
உத்தரப் பிரதேச மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவர் வாஸிம் ரிஸ்வி.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எப்பொழுதும் எங்கள் ஆதரவு உண்டு என்று உத்தரப் பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர் வாஸிம் ரிஸ்வி கூறியுள்ளார். முதல் கட்டமாக ரூ.51,000 நன்கொடை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த நிலத்தை ஏற்பது குறித்து வரும் 26-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று சன்னி மத்திய வக்பு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஷியா வக்பு வாரியம் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வசீம் ரிஸ்வி கூறினார். பல ஆண்டு கால பழமையான பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாத்தியமான சிறந்த தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஷியா வக்பு வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 'ஒரு சிறந்த, சாத்தியமான தீர்ப்பு' ஆகும். இப்போது ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ராமர் நம் அனைவரின் மூதாதையர் என்பதால், முஸ்லிம்களின் சார்பாகவும் கோயில் கட்டுமானத்திற்காக 'வாசிம் ரிஸ்வி பிலிம்ஸ்' ரூ.51,000 ராம ஜென்மபூமி நியாஸிடம் வழங்குகிறது.

கோயில் கட்டப்படும் நாட்களில், ஷியா வக்பு வாரியம் அதன் கட்டுமானத்திற்கு உதவும். அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது உலகெங்கிலும், இந்தியாவிலும் ராம பக்தர்களுக்கு பெருமைக்குரிய விஷயம்’’.

இவ்வாறு வசீம் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in