அயோத்தி; மறுசீராய்வு குறித்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டம்: வழக்கு தொடுத்தவருக்கு அழைப்பு இல்லை?

அயோத்தி; மறுசீராய்வு குறித்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டம்: வழக்கு தொடுத்தவருக்கு அழைப்பு இல்லை?
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது பற்றி 17-ம் தேதி நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு எந்த தகவலும் வரவில்லை என வழக்கு தொடுத்த முக்கிய நபரான இக்பால் அன்சாரி கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என இந்த வழக்கில் உ.பி. சன்னி வக்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகியுமான சப்ரயப் ஜிலானி கூறியிருந்தார்.

இந்த நிலையில் அயோத்தி விவகாரத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது அவசியமா என்பது பற்றி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சீராய்வு மனு தேவையா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முஸ்லிம் மத அமைப்புகள், அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வரவில்லை என வழக்கு தொடுத்த முக்கிய நபரான இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரும் ஞாயிறன்று கூடி விவாதிக்கும் விவரம் எனக்கு தெரியும். இருப்பினும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. அந்த வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதனை செய்து கொள்ளலாம். அதுபற்றி எனக்கு கருத்து ஏதுமில்லை. ஆனால் இந்த தீர்ப்பு ஒரு பிரச்சினைக்கு தீர்வை தந்துள்ளது. அதனை சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in