

கர்நாடகாவில் பாஜகவில் இன்று இணைந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 13 பேர் இடைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களாக உடனடியாக அறிவிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இவர்களை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும், அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் அவர்கள் 16 பேரும் இன்று பாஜகவில் இணைந்தனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ரோஷன் பெய்க் மட்டும் பாஜகவில் இன்னுமும் சேர்க்கப்படவில்லை.
கட்சியில் சேர்ந்த உடனடியாக அவர்களில் 13 பேர் இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பாளர்களாக பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக பாஜக மத்திய குழு ஒப்புதல் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.