Last Updated : 14 Nov, 2019 03:03 PM

 

Published : 14 Nov 2019 03:03 PM
Last Updated : 14 Nov 2019 03:03 PM

காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்ப முயன்ற காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்,வினித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீரப்பில் ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் எந்தவிதமான தவறும் நடக்கவில்லை, சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டியது இல்லை, முதல் தகவல் அறிக்கையும் அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

இந்தத் தீர்ப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு அருணாச்சலப் பிரதேசம் தாவாங் நகரில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

" ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு ஒன்றுமில்லாமல் போனது. இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது அவதூறு பரப்பும் முயற்சியாகும். இந்த தேசத்தின் மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை அதனுடைய விஷமத்தனமான, அவதூறுப் பிரச்சாரத்துக்காக மன்னிக்கமாட்டார்கள். மக்களைத் தவறாக வழிநடத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

ரஃபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக சில அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டமானது, ஆதாரமற்றது, திட்டமிட்டு அவதூறு பரப்பக்கூடியது. இந்தத் தீர்ப்பின் மூலம் இனிமேல் அந்த அரசியல்வாதிகள் மிகுந்த கவனத்துடன் எந்தக் கருத்தையும் கூறவேண்டும் என உணர்த்தியுள்ளது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் மிகவும் வெளிப்படையாக நடந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கிலும், அவசரத்தை மனதில் வைத்தும் இந்தக் கொள்முதலைச் செய்துள்ளோம்

தேசப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் தரத்தை உயர்த்தும் விஷயத்தில் எந்தவிதமான அரசியலும் கூடாது. ரஃபேல் சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை முழுமையாக நான் வரவேற்கிறேன். இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிலைப்பாடு சரியானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த முடிவு எடுத்தலிலும் வெளிப்படைத்தன்மையுடன் மோடி அரசு செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிக்காட்டுகிறது''.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x