

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் இடைத் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அவர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இவர்களை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும், அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும், அவர்கள் வெற்றி பெற்றால் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
17 எம்எல்ஏக்களில் இருவரின் வெற்றிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மற்ற 15 பேர் தொகுதிகளில் வரும் டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் இந்த தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே பாஜகவை ஆதரித்து வரும் அவர்கள் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் அவர்கள் 15 பேரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.