Published : 14 Nov 2019 11:43 AM
Last Updated : 14 Nov 2019 11:43 AM

சபரிமலை விவகாரம் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பாஜக வரவேற்பு

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பக்தர்களின் உரிமையையும், மதநம்பிக்கையையும் உறுதிபடுத்தியுள்ளது என பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்''. என தீர்ப்பளித்தனர்.

அதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்‘‘சபரிமலை விவகாரம் 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கிறோம். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பக்தர்களின் உரிமையையும், மதநம்பிக்கையையும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் என்பது அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டது அல்ல மாறாக காலம் காலமாக சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபு’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x