

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், விஎச்பி செய்தித் தொடர்பாளர்கள் சரத் சர்மா, தினேஷ்ஜி ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமஜென்ம பூமி அறக்கட்டளை தயாரித்துள்ள திட்டத்தின்படி மிகப் பிரமாண்டமான முறையில் கோயில் அமைக்கப்படும் என்று நம்புகிறோம். மத்திய அரசால் அமைக்கப்படும் அறக்கட்டளையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைச் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் யோசனை தெரிவிக்கிறோம்.
சோம்நாத் கோயில் கட்டப்படுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டபோது மத்திய அமைச்சராக இருந்த கே.எம். முன்ஷி அறக்கட்டளைக் குழுவில் சேர்க்கப்பட்டார்.
அதுபோல் ராமர் கோயில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும். ராமஜென்மபூமி அறக்கட்டளை தயாரித்துள்ள கோயில் திட்டப்படி, இந்தக் கோயில் 268 அடி நீளமும், 140 அடி அகலமும், 128 உயரமும் இருக்கும். இதற்காக 212 தூண்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.