

கடந்த 9-ம் தேதி மேற்கு வங்கத்தை புல்புல் புயல் கடந்து சென்றது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வான்வழியாக ஆய்வு செய்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புல்புல் புயலால் மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 15 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகி உள்ளன.
மாநில பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.