Published : 14 Nov 2019 07:39 AM
Last Updated : 14 Nov 2019 07:39 AM

கட்சித் தாவ‌ல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம்: கர்நாடக எம்எல்ஏக்கள் 17 பேர் தகுதி நீக்கம் செல்லும்

இரா.வினோத்

புதுடெல்லி / பெங்களூரு

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி 17 கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் இடைத் தேர்தலில் போட்டி யிடலாம் என‌ உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில் குமாரசாமி தலைமை யிலான மஜத‍, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸை சேர்ந்த 14 எம்எல்ஏக்களும், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தனர்.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், இரு கட்சிகளின் கொறடா அளித்த புகாரின்பேரில் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் ஜூலை 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வாரந்தோறும் விசாரணை நடத்தியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட‌ எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழ‌க்கறிஞர் முகுல் ரோத்த‌கி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வழ‌க்கறிஞர் கபில் சிபல், மஜத சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் உள்ளிட் டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலை யில் அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட‌து.

இந்த வழக்கில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. நீதிபதி என்.வி.ரமணா கூறும் போது, ‘‘கட்சி கொறடாவின் உத்தரவை மீறிய 17 எம்எல்ஏக்கள் மீதும் கட்சி தாவ‌ல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பேரவைத் தலைவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும். அதேசமயம் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை 2023-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டி யிட தடை விதிக்க முடியாது.

தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது பேரவைத் தலைவரின் அதிகாரத்தின் கீழ் வராது. எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை. இடைத்தேர்தலில் வென்று அமைச்சர், வாரிய தலைவர் உள்ளிட்ட எவ்வித அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை. இதுபோன்ற வழக்குகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட‌ எம்எல்ஏக்கள் முதலில் உயர் நீதிமன்றத்தையே அணுகி இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகியதை ஊக்குவிக்க முடியாது'' என தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசித்தார்.

கர்நாடகாவில் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பைரத்தி பசவராஜ் கூறும்போது, ‘‘இந்த தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வந்திருப்பதாக கூற முடியாது. அதே வேளையில் இடைத்தேர்தலில் போட்டி யிட எங்களுக்கு அனுமதி அளித்திருப் பது மிகப்பெரிய வெற்றியாகும். நாங்கள் இடைத்தேர்தலில் போட்டி யிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என்றார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும் போது, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறேன். எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும்'' என்றார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, ‘‘கட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கக் கூடாது. சட்டத்துக்கு புறம்பாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக அரசை குடியரசுத் தலைவர் கலைக்க வேண்டும்''என கோரியுள்ளார்.

பாஜகவில் இணைகின்றனர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக் கள் பைரத்தி பசவராஜ், சோம சேகர், பிரதாப் கவுடா பாட்டீல் உள்ளிட் டோர் கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணா உடன் நேற்று மாலை பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்து பேசினர்.

அப்போது 17 பேரும் காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணை வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே, கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான‌ ரோஷன் பெய்க், 17 பேரும் வியாழக்கிழமை பாஜகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த பிறகு 17 பேரில் பெரும்பான்மையானவர்கள் டிசம்பர் 5-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x