ஆர்டிஐ சட்டத்துக்குள் வந்தது தலைமை நீதிபதி அலுவலகம்: 3 வகை தீர்ப்புகளை எழுதிய நீதிபதிகள்

உச்ச நீதிமன்றம் பிரதிநிதித்துவப்படம்
உச்ச நீதிமன்றம் பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

அரசியலமைப்புச் சட்ட ஜனநாயக அமைப்பு முறையில் நீதிபதிகள் சட்டத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக இருக்க முடியாது. ஆதலால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபக் குப்தா ஆகியோர் ஒரேமாதிரியான தீர்ப்பையும், நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தனித்தனித் தீர்ப்பை வழங்கினர்.

2010-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த உச்ச நீதிமன்றத்தின் செயலாளர் அலுவலகம், பொது தகவல் அலுவலகம் தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் (ஆர்டிஐ) கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் " உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் சட்டத்துக்குள் வர வேண்டும். நீதிமன்ற சுதந்திரம் என்பது நீதிபதிகள் சிறப்புரிமை அல்ல. அது அவர்களுக்குரிய பொறுப்பு" எனத் தெரிவித்தனர்.

88 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது

அதன்பின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றச் செயலாளர், நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகம் வரும். கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம். அரசியலமைப்பு ஜனநாயகத்தில் சட்டத்தைவிட நீதிபதிகள் உயர்ந்தவர்களாக இருக்க முடியாது

தலைமை நீதிபதி அலுவலகம் என்பது அரசு அமைப்புக்கு உட்பட்டதுதான். தகவல் அறியும் உரிமைச்சட்டம், அந்தரங்க உரிமை ஆகியவை நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

அந்தரங்க உரிமை என்பது மிகவும் முக்கியமான அம்சம். தலைமை நீதிபதி அலுவலகத்திலிருந்து தகவல்கள் அளிக்கும் போது, அந்தரங்க உரிமை, வெளிப்படைத்தன்மையோடு நடுநிலையாக இருக்க வேண்டும்

தகவல் அறியும் சட்டத்தை ஒரு கண்காணிப்பு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. வெளிப்படைத்தன்மையைக் கையாளும் போது, நீதிமன்ற சுதந்திரத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கூறுகையில், " நீதிபதிகளை நியமிக்கும்போதுகூட கொலிஜியம் நீதிபதிகளின் பெயரைத்தான் வெளிப்படையாக அறிவிக்கும், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் காரணங்களை அல்ல" என்றுதெரிவித்தார்கள்.

நீதிபதி சந்திரசூட் தனியாக எழுதிய தீர்ப்பில் கூறுகையில், " நீதிபதிகள் அரசியலமைப்பு பதவியை வகிக்கிறார்கள், மக்களுக்கான கடமையைச் செய்கிறார்கள். ஆதலால், நீதித்துறை காப்பிடப்பட்ட வகையில் தங்களுக்கான பாதுகாப்புடன் செயல்பட முடியாது" எனத் தெரிவித்தார்

நீதிபதி சஞ்சய் கண்ணா கூறுகையில், " நீதித்துறை சுதந்திரமும், வெளிப்படைத்தன்மையும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நீதிபதி சஞ்சய் கண்ணாவின் கருத்துக்கு மாறி தீர்ப்பு அளித்த ரமணா கூறுகையில், " அந்தரங்க உரிமை, வெளிப்படைத்தன்மைக்கும் இடையே சமநிலை சமன்பாடு இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in