

லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் காரணம் அல்ல என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவது சரியா?
இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. முடங்கியுள்ள நாடாளுமன்றத்தை செயல்படுத்த மத்திய அரசுதான் முயற்சிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதற்கான ஒரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் களால் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் திரும்ப அழைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான முயற்சியும் இந்த அரசு எடுத்து இரு தரப்புக்கும் இடையே ஒரு பொதுப் பாதையை அமைத்துக் கொடுக்கவில்லை. இதை செய்ய நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என அரசு கூறிவிட்டு அவர்களில் யாரையும் அணுகவில்லை. இதுபோன்ற பேச்சுகளை, மக்களை கவர்வதற்காக அரசு பேசுகிறதே தவிர செயலில் காட்டுவது இல்லை.
அரசு 2 முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியும் காங்கிரஸ் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் போகவில்லையே?
அங்கும் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது போன்ற தோரணையில் செயல்படுகிறார்கள். அக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி போன்ற தலைவர்களின் பேச்சுகளே இதற்கு உதாரணம். அனைத்து கட்சிக் கூட்டத்தில் அரசு சற்று இணக்கமாக பேசினால் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இறுக்கத்தை விட்டு பேச முன்வருவார்கள். அதற்கான சூழலை ஏற்படுத்தாதது அரசின் தவறே தவிர, எதிர்க்கட்சிகளின் தவறு அல்ல.
மாநில சட்டப்பேரவைகளில்தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதுபோல் நாடாளுமன்றத்திலும் நடந்துள்ளதே?
முந்தைய ஆட்சியில் நாடாளு மன்றத்தில் தனித் தெலுங்கானா கோரிக்கையில் ‘ஸ்பிரே’ அடித்து அமளி செய்யப்பட்டது. இதற்கு அந்த உறுப்பினரை அவை நீக்கம் செய்ய அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக கோரினோம். இதுபோல் கடந்த பல ஆண்டுகளாக யாரும் நீக்கப்பட்டதில்லை. அவையிலிருந்து நீக்கம் என்பது ஒருமனதாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி ஒருதரப்பாக இருக்கக்கூடாது.
நாடாளுமன்ற முடக்கத்தை காங்கிரஸ் தனது சுயலாப அரசியலுக்காக செய்வதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் புகார் கூறியுள்ளாரே?
அவர் இப்படி கூறியது பற்றி எனக்குத் தெரியவில்லை. இது பற்றி அவரிடம் பேசாமல் என்னால் கருத்து கூற முடியாது.
பிஹார் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸை ஆதரிக்கிறீர்களா?
இல்லை! இல்லை! நாடாளு மன்றத்தை முடக்குவதற்காக நாங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை. நாட்டு மக்களின் பொதுப் பிரச்சினைகளுக்காக அனைவரும் இணைந்து போராடுகிறோம். 25-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய ஊழலுக்கு காரணமான முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை பதவி விலகச் சொல்வது தவறல்ல. கறுப்பு பணத்துக்காகவே ஒரு கிரிக்கெட் நிறுவனத்தை நடத்திய குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜை பதவி நீக்கக் கோருவதை யாரும் தவறாகக் கொள்ள மாட்டார்கள். லலித் மோடிக்கு ஆதரவு தந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவியில் நீடிப்பதுதான் தவறு.
நாடாளுமன்ற முடக்கத்தால் யாருக்கு லாபம்? எதிர்க்கட்சிகளுக்கா? அரசுக்கா?
இதில் லாப நஷ்டம் பார்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப அரசு வாய்ப்பளிக்கவில்லை என்றுதான் பார்க்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்க ளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதை விடுத்து, இதை வெளியில் அல்லது வேறு வகைகளில் நடத்தலாமே?
நீங்கள் சொல்வது ஏற்கக் கூடியது தான். ஆனால் இதற்கான சமயத்தில் நாடாளுமன்றம் நடப்பதால் நாங்கள் அங்கு போராட வேண்டியதாகி விட்டது. இது நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின்பும் தொடரும். பிஹார், உ.பி. போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் அதற்கான களம் தான். அங்கெல்லாம் மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். அதில் நாங்கள் வெல்வது உறுதி.