Published : 13 Nov 2019 03:41 PM
Last Updated : 13 Nov 2019 03:41 PM

திருப்பதி போல் மாறுகிறது அயோத்தி: புகழ் பெற்ற ஆன்மீக நகரமாக மாற்ற உ.பி. அரசு புதிய திட்டம்


திருப்பதியை போலவே அயோத்தியையும் உலக புகழ்பெற்ற இந்து ஆன்மீக ஸ்தலமாக மாற்ற உத்தர பிரதேச அரசு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்குவதுடன், ஒரு அறக்கட்டளையை தொடங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கான அறக்கட்டளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து தகவல் துறை இணை இயக்குநர் முரளிதர் சிங் கூறியதாவது:

அயோத்தியை முழுமையான அளவில் மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீர்ப்புக்கு பிறகு கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்பதால் அதனுடன் சேர்ந்து அயோத்தி நகரை மேம்படுத்தும் திட்டம் வேகமெடுக்கும்.

சரயூ நதியில் படகு போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி தீர்த்த விகாஸ் பரிஷத் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி சர்வதேச விமான நிலையில் 2020-ம் ஆண்டு ராமநவமி தினத்தில் திறந்து, முதல் விமானத்தை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அயோத்தி வருகை தருவதால் 5 ஸ்டார் ஓட்டல்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பைஸாபாத் மற்றும் அயோத்தியை இணக்கும் பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 67 ஏக்கர் பரப்பளவில் கோயில் மற்றும் அதுசார்ந்த கட்டுமானங்கள் அமைக்கும் நடவடிக்கையை புதிய அறக்கட்டளை மேற்கொள்ளும்.

மற்ற இடங்களை அதனுடன் சேர்ந்து மேம்படுத்த அயோத்தி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருப்பதியை போலவே அயோத்தியையும் உலக புகழ்பெற்ற இந்து ஆன்மீக ஸ்தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அயோத்தியை ஆன்மீக நகரமாக மாற்றுவதற்கு ஏற்றவாறு அதன் அமைப்பையும் மாற்றி வருகிறோம். நகருக்குள் வருவதற்கு 10 வாசல்கள் கட்டப்படும். ஓய்வு இல்லங்கள், தங்கும் விடுதிகள், அன்னதான கூடம், இலவச உணவு வழங்கும் இடம், வேத பாடசாலை, கோசாலை என அனைத்தும் கொண்டதாக அயோத்தி நகரம் புது பொலிவு பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x