

அயோத்தி மீதான வழக்கில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உ.பி. அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மீது நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
முக்கிய மனுதாரர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, தீர்ப்பு வெளியான அன்று அதை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இதன் மறுநாள், சமூகவலைதளங்களில் ஒருசாரர், நியாயமான தீர்ப்பு அளிக்கப்படாதமையால் மசூதிக்காக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக் கூடாது என கருத்துகள் வெளியிட்டனர்.
இதையடுத்து அயோத்திவாசியான அன்சாரியும் மசூதிக்கான நிலம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை எனக் கூறினார். நேற்று மீண்டும் மனம்மாறியவர் பாபர் மசூதி வளாகத்தின் உள்ளே அளிக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை’ இணையத்திடம் இக்பால் அன்சாரி கூறும்போது, ‘பாபர் மசூதி இடிப்பிற்கு பின் அரசு அதனைச் சுற்றி ஆக்கிரமித்த 67 ஏக்கர் நிலப்பரப்பின் உள்ளே நிலம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நாங்கள் நிலத்தை ஏற்போம். இல்லை எனில் அந்த நிலம் எங்களுக்கு தேவை இல்லை.’ எனத் தெரிவித்தார்.
இதேபோன்ற கருத்தை மற்றொரு முக்கிய மனுதாரரும் அயோத்திவாசியுமான ஹாஜி மஹபூப் உசைனும் 67 ஏக்கரின் உள்ளே நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதேசமயம், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த சன்னி மற்றும் ஷியா வஃக்பு வாரிய நிர்வாகிகள் புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதில் முஸிம்கள், மசூதியுடன் முஸ்லிம் சிறுபான்மை பல்கலைக்கழகமும் அமைக்கும்படியான நிலம் ஒதுக்கப்பட வேண்டும்’ என முதல்வர் யோகியிடம் கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பில் லக்னோவின் நத்வத்துல் மதரஸாவின் தலைவரான சல்மான் உசைன் நத்வீ, ஹமீதுல் ஹசன் நத்வீ, பரீதுல் ஹசன், யூசுப் உசைனி உள்ளிட்ட முக்கிய மவுலானாக்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதுபோல், பல்வேறு கருத்துக்கள் வெளியானாலும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எடுக்கும் முடிவே பெரும்பான்மை முஸ்லிம்களால் ஏற்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பிலான வழக்கை இந்த வாரியமே முன்னின்று நடத்தி இருந்தது.
இதன் நிர்வாகிகள் கூட்டம் வரும் 17 ஆம் தேதி லக்னோவில் கூட உள்ளது. இதில், மசூதிக்கான நிலம் பெறுவதன் மீது தீவிர ஆலோசனை செய்து முக்கிய முடிவு எடுகப்பட உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ’உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பதன் மீது முதலில் முடிவு எடுப்போம்.
அதற்கு ஏற்றப்படியே மசூதிக்கான நிலத்தை பெறுவது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கு முன்பாக, எந்த உருவில் வெளியாகும் கருத்துக்களையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.’ எனத் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த 9 -ம் தேதி வெளியானது. அதில், அயோத்தியில் மசூதிக்கான இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை நகரங்களான பைஸாபாத் மற்றும் அயோத்தி ஒன்றாக இணைந்து அமைந்துள்ளன. பைஸாபாத் மாவட்டம் எனும் இதன் பெயரை கடந்த வருடம் உபி அரசு ‘அயோத்யா’ என மாற்றி விட்டது.
இந்த காரணத்தை காட்டி உ.பி. அரசு அயோத்தியில் இல்லாமல் அதை ஒட்டி அருகிலுள்ள பைஸாபாத் நகரில் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் பின்னணியில் அயோத்தி நகரில் இருந்து முஸ்லிம்களை முற்றிலும் ஒதுக்கி வைப்பது காரணம் என அஞ்சப்படுகிறது.