ரஃபேல் விவகாரம்; ராகுல் மீதான அவதூறு வழக்கு : உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ராகுல் காந்தி : கோப்புப்படம்
ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரித்துக் கூறியதாக ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகச் சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

மக்களவைத் தேர்தலின்போது அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, " காவலாளி எனக் கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பியுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியைத் தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளைக் கூறவில்லை என பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்," ரஃபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் " எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தாரேத் தவிர நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை. விளக்கம் மட்டுமே அளித்தார் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த அவமதிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in