

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் வழக்கில் மத்திய அரசுக்கு நற்சான்று அளித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், வினித் தண்டா உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவில் " ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை" என கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்,வினித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டுக் கடந்த மே மாதம் 10-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
வரும் 17-ம் தேதியோடு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுவதையடுத்து, முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி வருகிறார். அந்த வகையில் நாளை இந்த சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பிடிஐ