

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10:30 மணியளவில் அளிக்கவுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி, நூற்றாண்டுகளாக அங்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது என்று சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது. அவரின் கடைசி வேலை நாள் வரும் 15-ம் தேதியாகும். 16, 17-ம் தேதி சனி,ஞாயிறு என்பதால், 15-ம் தேதிக்குள் முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை காலை 10:30 மணியளவில் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவ.16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மகர ஜோதி வழிபாடும் நடைபெறும் இதனால் வரும் 16-ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் முதல் வாரம் வரை தொடர்ந்து சபரிமலை வழிபாடு நடைபெறும். இந்த சூழலில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.