Published : 13 Nov 2019 11:50 AM
Last Updated : 13 Nov 2019 11:50 AM

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து 'ரசிக்கும் பாஜக': சிவசேனா சாடல்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க மற்ற அரசியல் கட்சிகள் போராடும் நிலையைப் பார்த்து ரசிக்கும் மனநிலை கொண்டதாக பாஜக இருக்கிறது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என மறுத்துவிட்டது. சிவசேனா கட்சியாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து தலையங்கத்தில் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 105 எம்எல்ஏக்கள் இருக்கும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதேசமயம் மாற்று ஆட்சி அமைக்க மற்ற அரசியல் கட்சிகள் கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. இதைப் பார்த்து பெரிய கட்சி மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இதுபோன்று பிறர் அடையும் துன்பத்தை, போராட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் மனப்பான்மைதான் மகாராஷ்டிராவை இந்த சூழலுக்குத் தள்ளி இருக்கிறது.

மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். ஆனால் சிவசேனாவுக்கு 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் அளித்தார்.

பல எம்எல்ஏக்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, அவர்களிடம் கையொப்பம் வாங்குவது எவ்வாறு 24 மணிநேரத்தில் சாத்தியமாகும், இது வியப்பாக இருக்கிறது. அரசு இயந்திரத்தை, நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்றால் இதுதான்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளுக்கு இடையே தெளிவான சிந்தனை இருந்தாலும்கூட, முறையான கூட்டுறவு அவசியம். ஆளுநர் 24 மணிநேரத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைக் கேட்கிறார். இதைப் பார்த்து பாஜக ரசிக்கிறது. இது நல்லவிதமான போக்கு அல்ல.

அரசியலில் அறம், நெறிமுறைகள் குறித்துப் பேசுபவர்கள்தான், நடப்பு அரசியலில் அழிவுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு எடுத்தது என்பது ராஜதந்திரம் அல்ல, அது சதித்திட்டத்தின் ஒருபகுதி.

மக்கள் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் ஆட்சி அமைக்கத் தீர்ப்பு அளித்தார்கள். ஆனால், பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதா. நாங்கள் எந்தவிதமான மாற்று ஆட்சி அமைக்கவும் தேடவில்லை. கொள்கைகள், அரசியல் ஒழுக்கம், அறம் குறித்துப் பேசும் பாஜக, சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தபின் அதைப்பின்பற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x