பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளை சிகிச்சைக்கு 4 கி.மீ. தூக்கிச் செல்லும் தந்தை

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளை சிகிச்சைக்கு 4 கி.மீ. தூக்கிச் செல்லும் தந்தை
Updated on
1 min read

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது மகளை, தினமும் 4 கி.மீ. தொலைவில் உள்ள சுகாதார மையத் துக்கு தூக்கிச் சென்று வருகிறார் அவளது தந்தை.

ஜார்கண்ட் மாநிலம், நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த ஹடியாபட்டா கிராமத்தைச் சேர்ந்தவர், 55 வயது சவுந்தர் முண்டா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை.

இந்நிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகளை அவர் தினமும் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு தூக்கிச் சென்று வருகிறார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில மணி நேரம் மட்டுமே மருத்துவர்கள் இருப்பார்கள். அந்த நேரத்தில் அங்கு செல்லாவிட்டால் சிகிச்சை பெற முடியாது. எனவே இடி, மின்னல், மழையாக இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தனது மகளை தினமும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று காயங்களுக்கு கட்டுப் போட்டு வருகிறார் சவுந்தர்.

போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘சுரேந்திர சர்தார் (42) என்ற ஓட்டுநர் கடந்த ஜூலை 2-ம் தேதி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பலத்த காயம் அடைந்த சிறுமி 1 கி.மீ. தூரம் வீட்டுக்கு தவழ்ந்து வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது தொடர்பாக துமாரியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து சுரேந்திர சர்தார் இன்னொரு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சவுந்தரின் மகள், சுரேந்திரை அடையாளம் காட்டினாள்” என்றனர்.

பலாத்காரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலில் ராஞ்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 45 நாட்கள் தினமும் ‘டிரஸ்ஸிங்’ செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்பிறகு ராஞ்சி மருத்துவமனையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. அதற்காகத்தான் தினமும் மகளை தூக்கிச் செல்கிறார் சவுந்தர்.

மகளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வீட்டில் உள்ள பொருட்களை விற்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். ‘‘எனக்கு என் மகள்தான் முக்கியம். வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சேமித்து வைத்த காசு எல்லாம் செலவாகி விட்டது. இப்போது கடனாளியாக இருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நாங்கள் கஷ்டபட வேண்டும் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். வீட்டுக்கு மருத்துவர் வந்து என் மகளுக்கு கட்டுப் போட்டு சென்றால் நன்றாக இருக்கும். ஆனால், நடக்கிற காரியம் இல்லை’’ என்கிறார் கண்ணீருடன் கூறுகிறார் சவுந்தர்.

இதற்கிடையில், சவுந்தரின் குடும்பத்துக்கு உதவ முயற்சி மேற்கொண்டிருப்பதாக கட்சிலா சப் டிவிஷனல் அதிகாரி பி.பி.சிங் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in