

அயோத்திக்கு வரும் ராம பக்தர்களுக்கு உணவளிக்க சமையல்கூடம் அமைப்பதற்கு பாட்னாவைச் சேர்ந்த அனுமன் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிஹார் மாநிலம் பாட்னாவில் மகாவீர் மந்திர் அறக்கட்டளை உள்ளது. இதன் சார்பில் புகழ்பெற்ற அனுமன் கோயில் உள்ளது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மகாவீர் அறக்கட்டளையின் செயலர் கிஷோர் குணால் கூறும்போது, “ராமர் கோயில் அமைக்க ரூ.10 கோடியை எங்களது அறக்கட்டளை வழங்கவுள்ளது. கோயில் கட்ட 5 ஆண்டுகளாகும் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2 கோடியை தவணை முறையில் வழங்குவோம்.
மேலும் கோயிலுக்கு பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு உணவளிக்க வசதியாக மிகப்பெரிய சமையல் கூடம் அயோத்தியில் அமைக்கப்படும். பாட்னாவின் மிகவும் பிரபலமான இனிப்புவகையான நைவேத்தியம் லட்டு பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த லட்டு வகைகள் ரகுபதி லட்டுகள் என அழைக்கப்படும்” என்றார்.
கிஷோர் குணால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 1990-களில் அயோத்தி பகுதியில் சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அயோத்தி குறித்து 2 நூல்களையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ