

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கு மற்றும் ஆர்டிஐ வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இவர்களை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, தகவலறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) கொண்டுவரப்பட்டது. 2005-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இச்சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து அரசுத் துறைகளும் கொண்டு வரப்பட்டன.
ஆனால் இந்த சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற அலுவல்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தொடர்பாக சில தகவல்கள் கோரப்பட்டன. ஆனால் தகவல் தர மறுத்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் வரும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் மற்றும் ஆர்டிஐ ஆகிய வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.